விடா முயற்சியால், யூபிஎஸ்சி தேர்வில் பழங்குடி இன மாணவி மல்லிகா சாதனை

Post a Comment

 



            நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் சிறிய பழங்குடி கிராமம் கக்குலா. படுகர் பழங்குடியின மக்கள் வசிக்கும் அந்த கிராமத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார், 25 வயதான மல்லிகா. 'கல்விதான் வளர்ச்சியைத் தரும்', என்ற பெற்றோரின் வார்த்தைகள் தான், படுகர் பழங்குடி இன மாணவியான மல்லிகாவை சாதனை படைக்க வைத்துள்ளது.

விடா முயற்சியால் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி 

    யூபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை தொடர்ச்சியாக முதல்நிலை தேர்விலேயே தோல்வியை சந்தித்தாலும், விடா முயற்சியால் பயின்று தன் நான்காவது முயற்சியில் இந்திய அளவில் 621-வது ரேங்க் பெற்று யூபிஎஸ்சி தேர்வில் வென்றுள்ளார்

        "அப்பா சுந்தரன், சிறிய அளவில் தேயிலைத் தோட்டம் வைத்துள்ளார். அம்மா சித்ரா தேவி, கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக இருக்க வேண்டும் என என்னுடைய பெற்றோர்கள் கூறுவார்கள். படிப்பு ஒன்றுதான் வருங்காலத்தில் கைகொடுக்கும் என்பதுதான் அவர்கள் எனக்கு சொல்லி வந்தது.

அம்மா - அப்பாவின் தியாகம்

        அம்மா - அப்பாவின் ஊக்கத்தால் தான் படிக்க முடிந்தது. அவர்களின் ஒட்டுமொத்த வருமானத்தையும் என் படிப்புக்காகவும் யூபிஎஸ்சி பயிற்சிக்காகவும் செலவழித்தனர். வசதியான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை. அவர்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்துவிட்டு எனக்காக எல்லாமே செய்தனர். கல்வியில் எனக்கு எல்லாம் சிறப்பானதாக கிடைக்க வேண்டும் என நினைத்தனர்.

        8-ம் வகுப்பு வரை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியிலும் அதற்கு பிறகு குன்னூரில் உள்ள கான்வென்ட் பள்ளியிலும் பயின்றேன். 10-ம் வகுப்பில் 473 மதிப்பெண்கள் பெற்றேன். 12-ம் வகுப்பில் 1140 மதிப்பெண்கள் பெற்றேன். அதன்பிறகு, அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பயோ டெக்னாலஜி படித்தேன்.

முன்னாள் மாணவர்கள்

            எங்கள் கல்லூரியல் பயன்ற முன்னாள் மாணவர்கள், கல்லூரிகளுக்கு வந்து ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவார்கள். அப்போதுதான் எனக்கு யூபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. கல்லூரியிலேயே வகுப்புகள் முடிந்தவுடன் யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

        2016-ல் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு யூபிஎஸ்சி தேர்வுக்கு முழுமையாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். சென்னையில் தான் நான்கு ஆண்டுகள் படித்தேன். மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி மற்றும் சந்தோஷ் சபரி இன்ஸ்டிட்யூட்டில் படித்தேன்.

வெல்ல முடியும் என்ற நம்பிக்கை

        மூன்று முறை என்னால் முதல்நிலை தேர்விலேயே வெற்றியடைய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். மிகவும் கஷ்டமானதாகத்தான் இருக்கும். ஆனால், அதனையும் மீறி வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பெற்றோரும் இதனை தோல்வியாக எடுக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கமளித்தனர்" என்கிறார், மல்லிகா.

        நன்றாக படிப்பவர்கள் தான் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதில்லை. விடா முயற்சி வேண்டும். நமக்கு நாமே ஊக்கமளித்துக்கொள்ள வேண்டும்" என மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறார், மல்லிகா.

Related Posts

Post a Comment