Success Story : சாலையோர கடையில் பரோட்டா போட்டவரின் மகன்.. ஆண்டுக்கு ரூ. 18 கோடி சம்பாதிக்கும் மேஜிக்!

Post a Comment





கையேந்தி பவனில் தொடங்கி ரெஸ்டாரண்ட் வரை..!

                சென்னை சாலையோர கடையில் பரோட்டா போட்டவரின் மகன் இன்று ஆண்டுக்கு ரூ. 18 கோடி வருமானம் ஈட்டுவது இளைஞர்கள் பலரிடமும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்து வந்த பாதை குறித்த சில தகவல்கள்..

        இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ள பெரும்பாலானவர்கள் சிறுவயதில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். தொடர் தோல்விகளையும் இன்னல்களையும் கண்டு எதிர்நீச்சல் போட்டவர்களின் வாழ்க்கையில்தான் இன்று வசந்தம் வீசிக்கொண்டிருக்கிறது.

                அந்த வகையில் தான் கடந்து வந்த கரடுமுரடான பாதையை மலர் பாதையாய் மாற்றியிருக்கிறார் சுரேஷ். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தோசைக்கல் ரெஸ்டாரென்டின் ஓனர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இளம் தொழிலதிபர்.

              தள்ளுவண்டி கடைக்காரர் சின்னசாமி என்ற தள்ளுவண்டி கடைக்காரரின் மகன் சுரேஷ். இவர்தான் தற்போது ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இளம் தொழிலதிபர். தோசைக்கல் ரெஸ்டாரென்டின் உரிமையாளர் ஆவார்.

தள்ளுவண்டி உணவுக்கடை
பெசன்ட்நகர் கடற்கரையில் 1979-ம் ஆண்டு சின்னசாமி ஒரு தள்ளுவண்டியில் உணவுக் கடை நடத்தி வந்தார். பின்னர், இதே போன்று ஒரு கடையை மெரினா கடற்கரையில் 1987-ல் தொடங்கினார்.

அடையாறு உணவகம்
                    இது தவிர அடையாறு பகுதியில் சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து, மதிய உணவு விற்பனை செய்தார். ஆட்டுக்கறி, கோழிக்கறி குழம்பு ஆகியவற்றுடன் முழு சாப்பாடு விற்பனை செய்தார். பிஸ்னஸ் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.

கேலி கிண்டல்
        தந்தையின் தொழிலுக்காக அவ்வப்போது ஹோட்டலில் பாத்திரங்கள் கழுவி கொடுப்பது, பரோட்டா போடுவது என தனது தம்பியுடன் சேர்ந்து உதவி செய்து வந்துள்ளார் சுரேஷ். அப்போது ஆல்காட் நினைவு பள்ளியில் மாணவராக இருந்தார். தந்தையின் சாலையோர உணவுக் கடையில் பரோட்டா போட்டதன் காரணமாக பள்ளியில் படிக்கும் போது பலமுறை சகமாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்

சென்னை திரும்பினர்
            இந்நிலையில் அவரது குடும்பம் திண்டுக்கல்லுக்கு இடம் பெயர்ந்தது. அப்போது அவருக்கு 13 வயது. அவருடைய தந்தை பெரியகோட்டை என்ற கிராமத்தில் விவசாயம் செய்ததுடன் அருகில் உள்ள பழனியில் சிறிய உணவகத்தையும் தொடங்கினார்.
             இதனால் சுரேஷ் தனது படிப்பை தொடர முடியாமல் போனது. சுரேஷ் தமது தந்தையுடன் அந்த உணவகத்தில் வேலை பார்த்தார். விவசாயம் மற்றும் ஹோட்டலில் போதுமான வருமானம் கிடைக்காததால் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சென்னை திரும்பினர்.

இட்லி,தோசை,பூரி
        சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்ரீனிவாசபுரத்தில் ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்து மீண்டும் உணவு வியாபாரத்தைத் தொடங்கினர். அப்போது தான் 15வயதில் சுரேஷ் தமது தந்தையின் உணவு கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இன்னொரு உணவுக்கடையைத் தொடங்கினார். இட்லி, தோசை, பூரிகள் விற்க ஆரம்பித்தார்.



12ஆம் வகுப்பு வரை
        விட்டுபோன தனது படிப்பை தொடர முடிவு செய்த சுரேஷ் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக ஒரு தனியார் டுடோரியலில் சேர்ந்து படித்தார். 10ஆம் வகுப்பு தேர்வில் 37 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றார். இதனை அடுத்து பெசன்ட் நகரில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் 12ம் வகுப்பு வரை படித்தார்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட்
        1997-ம் ஆண்டு அவர் துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் பி.ஏ கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பில் மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டில், போரூரில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார்.

பயணிகள் கப்பல்
   அதன் பின்னர், செய்முறை அறிவுக்காகவும், அனுபவத்துக்காகவும் இன்ஸ்டியூட்டின் முன் அனுமதியுடன், சவேரா ஹோட்டல் கிச்சனில், நள்ளிரவு வரை பணியாற்றினார் சுரேஷ். தேர்வில் வெற்றி பெற்று பட்டம் பெற்றார். பின்னர், 2001-2003ல் தொலைதூரக் கல்வி வழியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்தார். பயணிகள் கப்பல்கள் என தொடர்ந்தது அவரது பணி.

தோசைக்கல் ரெஸ்டாரென்ட்
        பின்னர் கிராண்ட் கேமன் தீவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தலைமை சமையல்காரராக உயர்ந்து, பின்னர், சென்னை திரும்பி ரெஸ்டாரெண்ட்களைத் தொடங்கினார் சுரேஷ். தோசைக்கல் என்ற பெயரில் செயல்படும் இவரது ரெஸ்டாரென்ட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றன. சிறுவயதில் பல சறுக்கல்கள் கேலி கிண்டல்களுக்கு ஆளான சுரேஷ் இன்று ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழிலபதிராக உயர்ந்திருப்பது சாதிக்க துடிக்க பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாகும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..!

Related Posts

Post a Comment